கிணற்றுநீர் மோட்டாரை இயக்கும் சோலார் பேனல்களில் நவீன தொழில்நுட்பம் 80 சதவீத மானியத்துடன் கிடைக்கும்

கிணற்றுநீர் மோட்டாரை இயக்கும் சோலார் பேனல்களில் நவீன தொழில்நுட்பம் 80 சதவீத மானியத்துடன் கிடைக்கும்


திண்டுக்கல், : சூரிய ஆற்றலை பயன்படுத்தி கிணற்றில் நீர் இறைக்கும் திட்டம் வேளாண்பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பேனல்கள் சூரியன் நகரும் திசையை நோக்கி திரும்பும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இதற்காக விவசாயிகளுக்கு 80சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப வேளாண் துறை சார்பில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தோட்டனூத்து ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள சோலார் பம்ப் திட்டம் குறித்து செய்தியாளர்கள் பயணத்தில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. கலெக்டர் ஹரிஹரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயி ஆனந்த லட்சுமியின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட இத்திட்டம் குறித்து செயற்பொறியாளர் ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.16 ஏக்கர் பரப்பளவுள்ள இத்தோட்டத்தில் 8 ஏக்கரில் தென்னையும், மீதமுள்ள பகுதியில் எலுமிச்சை, நெல்லி பயிரிடப்பட்டுள்ளது. மின் தேவையைக் குறைக்கவும், மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்தும் வகையிலும் சோலார் மூலம் கிணற்று நீரை இறைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 20 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5குதிரைத்திறன் கொண்ட மோட்டாரை இயக்கலாம். சூரியன் இருக்கும் திசையை நோக்கி தானாக திரும்பும் வசதி கொண்டது. திருப்புவதற்கான சக்தியை தர தனியே ஒரு சோலார் டிராக்கர் எனும் சிறிய பேனல் உள்ளது. அதில் கிடைக்கும் மின்சாரம் மூலம் 20 பெரிய பேனல்கள் சூரியனின் திசைக்கேற்ப திரும்பும். திரும்பும் கோணம் ஒவ்வொரு 20நிமிடத்திற்கும் ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும்.ஒரு லட்சத்து 60ஆயிரம் லிட்டர் நீர் இதன் மூலம் பெறலாம். இந்த நீரை சொட்டுநீர் பாசன முறையில் பயிர்களுக்கு பாய்ச்சுவதால் நீர் வெகுவாய் சேகரமாகும்.

80 முதல் 100அடி ஆழமுள்ள கிணறுகளில் இந்த மோட்டார் விரைந்து நீரை மேலே கொண்டு வரும். சூரியஆற்றல் மூலம் கிடைக்கும் ஆற்றலை சேமிக்க முடியாது. அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.காற்று நேரங்களில் சோலார் பேனலில் படியும் தூசியை துடைத்து விட்டால் போதும். மழைகாலங்களில் மழைநீரே போதுமானதாக இருக்கும் என்பதால் சோலார் மோட்டாரின் தேவை குறைவாகவே இருக்கும்.சோலார்ஆ ற்றலைப்பயன்படுத்தும் தனி மோட்டாரையே இதற்கு பயன்படுத்த வேண்டும்.

விவசாயி ரவிக்குமார் கூறுகையில், மின்தட்டுப்பாடு குறித்த கவலையில்லாமல் இவற்றைப் பயன்படுத்தலாம். இயற்கை ஆற்றலை பயன்படுத்துவதின் மூலம் சுற்றுச்சூழல் மேம்படும். மானியமும் கிடைப்பதால் விவசாயிகள் இவற்றை வாங்கி பயன்பெறலாம் என்றார்.வேளாண்பொறியியல்துறை சார்பில் இத்திட்டத்திற்காக ஆண்டிற்கு 60 விவசாயிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 80சதவீதம் மானியமாக அளிக்கப்படுகிறது. மானியம் போக விவசாயிகள் தரப்பில் ரூ.1.17லட்சம் தேவைப்படும். மானியத்தைப் பொறுத்தளவில் கடந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.2.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு (0451) 2423758, (04545)245602 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment